வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்
ஆட்டிட்யூட்! இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனா ஆட்டிட்யூட் சரியில்லையே! என்கிறார்கள்.அதென்ன ஆட்டிட்யூட்?தமிழில் இதனை மனப்பாங்கு என்கிறார்கள். அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழ்கிற விஷயங்களை நமது மனம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது இவற்றின் தொகுப்பைத்தான் ஆட்டிட்யூட் (Attitude) என்கிறோம்.சுமாரான திறமை கொண்டவர்கள்கூட, தங்களது மனப்போக்கைப் பொருத்தமானவகையில் அமைத்துக்கொண்டால் மிகப் பெரிய அளவு முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.அதேசமயம், இதற்கு நேர் எதிராக, பிரமாதமான திறமைசாலிகள் நல்ல ஆட்டிட்யூட் இல்லாமல் தடுமாறுவதும் உண்டு. இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து தி டிஃப்ரன்ஸ் மேக்கர் (The Difference Maker) என்ற புத்தகம் வந்திருக்கிறது அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜான் சி மேக்ஸ்வல்.நல்ல ஆர்ட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால், நீங்கள் அப்படி முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள் என்று மாக்ஸ்வெல் எச்சரிக்கிறார். நாம் இந்த ஐந்து பேரையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன செய்தாலும் பப்பு வேகாது, நாம்தான் ஜெயிப்போம்!மார்ஸ்வெல் சொல்லும் அந்த 5 வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி.இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை ஜெயிக்கக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1. ஊக்கமின்மை:*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள், ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக்கொள்ளுங்கள்.*சரியான நபர்களோடு பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு எந்நேரமும் வளையவந்தால், உங்களைப் பற்றி உங்களுக்கே அவநம்பிக்கைதான் தோன்றும்.*நெகட்டிவ் வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சோர்வாக்கும், முன்னேற்றத்தைப் பாதிக்கும்.
2. மாற்றம்:* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்துகொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.* மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள்.* அதேசமயம், சில விஷயங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கைகளில் உறுதியாக இருங்கள்.
3. பிரச்னைகள்:*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும், தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள்.*பல சமயங்களில், நாம் பிரச்னை என்று நினைப்பது மேலோட்டமான ஒரு விஷயம், நிஜப் பிரச்னை ஆழத்தில் ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.*அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறத, தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.
4. பயம்:* பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறவன் கோழை அல்ல, வீரன். அவனால்தான் அந்தப் பயத்தை வெல்லமுடியும்.*உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.* நேற்று, நாளை ஆகியவற்றைவிட இன்றுதான் மிக முக்கியம், அதை மறக்காமல் இருந்தால் எந்தப் பயமும் உங்களை எதுவும் செய்யாது.
5. தோல்வி:* சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.*உங்கள் மொழியையே மாற்றுங்கள். ச்சே இப்படி நடந்திருக்கலாம். என்பதைவிட அடுத்தமுறை இப்படிச் செய்வேன் என்பது பெட்டர்.* சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியும், மற்ற பல நம் கையில் இல்லை. அவற்றை மாற்ற நினைத்துப் பிரயோஜனம் இல்லை, நம்மால் முடிந்ததைமட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.