Monday, 1 May 2023

படித்ததில் பிடித்தது

 நட்போ, காதலோ, குடும்பமோ எல்லா உறவுகளும் இப்போதெல்லாம் தொட்டாச்சிணுங்கியாக , சற்றே அழுத்தினால் உடைந்துவிடும் முட்டைகளாக மாறிவருகின்றன.


ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றுக் கருத்து வந்துவிட்டாலோ, அல்லது தவறைச் சுட்டிக்காட்டிவிட்டாலோ..


ஒன்று விலகல்.. 

அல்லது நீடித்த மெளனம்.. 

அல்லது நிரந்தர பிரிவு!


அதுநாள் வரை நிகழ்ந்த பல அன்பான, இனிமையான தருணங்களை நினைத்துப் பார்க்கவெல்லாம் நேரமில்லை.


செடிக்குத் தண்ணீர் ஊற்றி மரமாக்கிய தோட்டக்காரனாய் இருந்தாலும் ஒரு இலை கிிள்ள அவனுக்கு உரிமை இல்லாதச் சூழல்! தண்ணீர் ஊற்றியது கணக்கில்லை. இலை கிள்ளியதுதான் கணக்கு.


குழந்தைகள் கடற்கரையில் மணிக்கணக்கில் கட்டும் மணல் வீட்டின் உறுதியும், ஆயுளும்தான் உறவுகளிலும் என்று மாறிப்போவது கவலைப்பட வேண்டிய விஷயம்.


உறவுகள் பலவீனப்படாமல் நீடிக்க.. 


அன்பான தருணங்களை பரஸ்பரம் பாராட்டலாம். அடிக்கடி நினைத்துப் பார்க்கலாம். 


சுட்டிக்காட்டப்படும் தவறுகளை  பிடிவாதமாக மறுக்காமல் ஒருவேளை தவறுதானா என்று தள்ளிநின்றுப் பார்த்து பரிசீலிக்கலாம். 


தவறென்று உணர்ந்தால் தயக்கம் விட்டு மன்னிப்பு கேட்கலாம். 


அப்படி மன்னிப்பு கேட்கப்பட்டால் வீம்பைத் தொடராமல் மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளலாம்.


மாற்றுக் கருத்துக்களை ஏற்க அவசியமில்லை, ஆனால் அதற்கும் சம மரியாதை கொடுக்கலாம்.